ப.வேலுார்:தேசிய நெடுஞ்சாலையில், பாதுகாப்பு கருதி அமைத்த தடுப்பு சுவரை அகற்றியதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூரில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பரமத்தி உள்ளே நுழையும் சாலை முன் விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் பாலம் அமைக்கப்பட்டது. பரமத்தி மற்றும் திருச்செங்கோடு செல்லும் வாகனங்களுக்கு தனியாக சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. அப்பகுதி வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், பரமத்தி தேசிய நெடுஞ்சாலையில், பாலத்தின் இடது புறமாக அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்புச்சுவரை உடைத்து அகற்றி உள்ளனர். இந்த வழியாக, உள்ளூர் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள், பரமத்தி நகருக்குள் நுழைய திடீரென இடது புறமாக திரும்பும்போது பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவ்விடத்தில் வாகனங்கள் இடது புறமாக செல்ல எந்தவிதமான அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் ஜோதி பாஸ்கர் கூறுகையில், ''தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் இடதுபுறமாக செல்ல கான்கிரீட் தடுப்பு சுவரை அகற்ற அனுமதி இல்லை. மேலும், பரமத்தி நகருக்குள் நுழைய முன்னதாகவே சர்வீஸ் சாலை உள்ளது. தடுப்பு சுவர் அகற்றியது குறித்து ஆய்வு செய்யப்படும். பாலம் அமைத்த ஒப்பந்ததாரரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அகற்றிய கான்கிரீட் தடுப்பு சுவர் மீண்டும் அமைக்கப்படும்,'' என்றார்.
