திருநெல்வேலி: திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் நடந்த சிந்துவெளி நாள் விழாவில் 4 நூல்கள் மற்றும் ஆய்விதழ்களை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
சிந்துவெளி நாள் விழா நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் 'சிந்து வெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம்' நூலின் பத்தாம் ஆண்டு சிறப்புப் பதிப்பு, 'தொல்தடம்' ஆய் விதழ், 'கொந்தகை (கீழடி) அறிவியல் ஆய்வு' நூல், செயின்ட் ஜார்ஜ் கோட்டை நூலின் மறுபதிப்பு ஆகியவற்றை அமைச்சர் வெளியிட்டார்.
தொடர்ந்து, பொருநை அருங்காட்சியகத்தில் தமிழ் பண்பாட்டின் தொன்மை மற்றும் தொடர்ச்சியை விளக்கும் ஒளி, ஒலி காட்சிகள், தொடுதிரை, மெய்நிகர் காட்சிகள், ஆவணப்படங்கள், உயிரூட்டுக் காட்சிகள், மாதிரி வடிவங்களை அமைச்சர் ஆய்வு செய்தார்.
சிந்துவெளி நாகரிகத்தின் தொன்மை, பண்பாடு, கலை, எழுத்து மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை மக்களிடமும் ஆய்வாளர்களிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கில், ஆண்டுதோறும் செப்.,20ல் சிந்துவெளி நாள் கொண்டாடப்படுகிறது.
1924 செப்.,20ல் சிந்துவெளி நாகரிகம் குறித்த முக்கியத் தகவல்களை உலகிற்கு அறிவித்த தொல்லியல் ஆய்வாளர் ஜான் மார்ஷலை நினைவுகூறும் வகையில் இந்நாள் கடைப்பிடிக்கப்படு கிறது.
கலெக்டர் ஆனந்த் மோகன், தொல்லியல் துறை இயக்குநர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.,க்கள் முருகன், நாராயணன், கிறிஸ்டோபர், சிந்துவெளி ஆய்வு மைய ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன், பேராசிரியர்கள் கார்த்திகேயன், வீணா முஷ்ரிப், முனைவர் சுந்தர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
