புதுடில்லி:ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கி 8 ஆண்டுகள் பூர்த்தி ஆகி உள்ளது. இந்த திட்டத்தினால் 60 கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறி உள்ளார்.
ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 2018ம் ஆண்டு செப்.23 இதே நாளில் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இன்றுடன் இந்த திட்டம் தொடங்கி 8 ஆண்டுகள் ஆகி உள்ளது.
இதை குறிப்பிடும் வகையில் பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வழியாக நாட்டில் 60 கோடி மக்கள் உரிய மருத்துவக் காப்பீட்டை பெறுகின்றனர் என்று பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனும், உயர்தர மற்றும் மலிவு விலையில் மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம். அந்த நோக்கத்துடன் 8 ஆண்டுகளுக்கு முன்பாக ஆயுஷ்மான் பாரத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இன்று, இந்த திட்டத்தின் வழியாக 60 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன் பெறுகின்றனர். அவர்கள் அனைவரும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டை பெறுகின்றனர். மருத்துவ செலவுகளில் இருந்து கிடைக்க பெறும் இந்த சேமிப்பை சாத்தியமாக்கி, ஏழை மற்றும் நடுத்தர வர்த்தகத்தினர் பயன் பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான அனைத்து சுகாதார வசதிகளும் அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் வகையில் வசதிகள் செய்யப்படுகின்றன. ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் மையங்களில் 500 கோடிக்கும் அதிகமானோர் வந்துள்ளதாக வருகைகளில் பதிவாகி உள்ளது. கீழ்மட்ட அளவில் ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்தி உள்ளதை காட்டுகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
இவ்வாறு பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
