வண்ணத்துப்பூச்சி வாழ்விட பூங்கா காவேட்டிப்பட்டியில் திறந்து வைப்பு

By தினமலர்

வண்ணத்துப்பூச்சி வாழ்விட பூங்கா காவேட்டிப்பட்டியில் திறந்து வைப்பு
WhatsApp Facebook

நாமக்கல்:நாமக்கல் அருகே, காவேட்டிப்பட்டியில் அமைக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி வாழ்விட பூங்காவை, கலெக்டர் மதுபாலன் நேற்று திறந்து வைத்தார்.

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட காவேட்டிப்பட்டி பூங்கா வளாகத்தில், சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தின் கீழ் வண்ணத்துப்பூச்சி வாழ்விட பூங்கா புதிதாக அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. நாமக்கல் எம்.எல்.ஏ., திலீப், மாநகராட்சி கமிஷனர் செல்வ

பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் மதுபாலன் தலைமை வகித்து, வண்ணத்துப்பூச்சி வாழ்விட பூங்காவை திறந்து வைத்தார். தொடர்ந்து, பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் தாவரங்கள், வண்ணத்துப்பூச்சிகளின் இருப்பிடங்களை ஆய்வு செய்தார்.

வண்ணத்துப்பூச்சிகளின் சூழலியல் முக்கியத்துவம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பின் அவசியம் குறித்து பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். வளர்ந்த வண்ணத்துப்பூச்சிகளுக்கு தேவையான உணவை வழங்கும் பல்வேறு வகையான தேன் மற்றும் வண்ண மலர்கள் நிறைந்த தாவரங்களை கொண்டு இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பூங்கா நாமக்கல் மாவட்டத்திற்கான ஒரு முக்கியமான கல்வி மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு களமாகவும், விழிப்புணர்வு முயற்சியாகவும் திகழ்கிறது.